×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி பட்டு சேலை கண்காட்சி கலெக்டர் அனீஷ்சேகர் திறந்து வைத்தார்

மதுரை, டிச. 18: மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் கைத்தறி துறையின் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை ஜடாமுனி கோயில் தெருவில் உள்ள எல்.என்.எஸ் மகாலில் நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை, திருப்பூர் மற்றும் ராசிபுரம் மென்பட்டு சேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. பட்டு ரகங்களுக்கு 10 முதல் 65 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியை நேற்று கலெக்டர் அனீஷ்சேகர் திறந்து வைத்தார்.

பின்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு பொங்கல் கைத்தறி சிறப்பு பட்டு கண்காட்சியில் ரூ.144.05 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு விற்பனை குறியீடாக ரூ.200 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இணை இயக்குநர்கள் செல்வம், மீனாகுமாரி, உதவி இயக்குநர் திருவாசகர், உதவி அமலாக்க அலுவலர் இளங்கோவன், உதவி இயக்குநர் சுடலை மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Anish Sehgar ,Pongal festival ,
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா